வரலாற்று சிறப்பு மிக்க தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறைபக்தியுடன் சூழ்ந்திருக்க இனிதே நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா மலையையும் பொருட்படுத்தாது வெகு சிறப்பாக நடைபெற்றது. எலாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற்றன.இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகப்பெருமான் அழகிய சித்திரத் தேரில் வீதியுலா அரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அரோகரா என சொல்லியவாறு பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.வீதிகளில் பக்தர்கள் புடைசூழ சுவாமி உலா வந்தார். அப்போது, பெண்கள் சுவாமிக்கு தீபாராதனை காட்டி, கற்பூர சட்டி ஏந்தி வழிபட்டனர். பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தேர் மீது பல வர்ண பூக்கள் தூவி நேர்த்திக் கடனைச் செலுத்தினர். சிறப்பம்சமாக துர்கேஷ்வர ஆலய ஸ்தாபகரும் அதிபருமான தியாகராஜா கண சுவாமி குருக்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்கள் ஆலயத்தின் தர்மகர்த்தா என்றும் இறை பணியில் நிற்கும் கணகுக சிவத் தொண்டர் இரா. விஜயநாதன் அவர்கள் ஆற்றிவரும் சிவபணியினை பாராட்டி “சிவநெறிக்காவலர்” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவித்தார். தமிழ் வண் தொலைக்காட்சி சிறப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்தது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் தாராள அமுதம் வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு மூலையில் முதற்தடவையாக ஓர் மண்டகப்படி அமைத்து பக்தர்களுக்கு பல்வேறுவிதமான பலகார வகைகளும் பரிமாறப்பட்டன. விழா விநாயகப்பெருமானுக்கு பச்சை சாத்தி அலங்கரிக்கப்பட்ட ஊர்வலத்துடன் இனிதே நடந்தேறியது.