2015-05-23 இன்று 16ஆம் திருவிழா இனிதே நடந்தேறியது. விழாவில் வழமைபோல பல பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் சிறப்பம்சமாக பிரபல நடன ஆசிரியை ஜெனனி குமார் அவர்களின் மாணவிகள் ஓர் அசத்தலான “சிவகீர்தனம்” என்ற பரத நாட்டிய நிகழ்ச்சியினை வழங்கி பக்தர்களை இறைபக்தியுடன் சந்தோசம் கொள்ள வைத்தனர். ஜெனனி குமாரின் சிலம்பொலி ஷேஷ்திர மாணவிகளான காரணிகா இலங்கைனாதன், நிஷானா சுதாகரன் மற்றும் பிருதுவி ஆகியோர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றி கோவில் மண்டபத்தினை தெய்வீக அருளில் அதிர வைத்தனர். ஜெனனி குமார் அவர்களுக்கு கெளரவம் வழங்கும் ஓர் நிகழ்வும் நடன முடிவில் நடந்தேறியது. பிரம்டன் மாநகர முதல்வர் அவர்கள் விழாவில் தவிர்க்க முடியாத காரணத்தினால் விழாவிற்கு வரமுடியவில்லை. ஆதலினால் கௌரவ விருதினை ஆலய நிர்வாகத்திடம் ஜெனனி குமார் அவர்களுக்கு வழங்குமாறு சமர்ப்பித்திருந்தார். விருதினை ஜெனனி குமார் அவர்கள் ஆலய தர்மகர்த்தா இரா. விஜயநாதன் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதுடன் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்களிடம் இருந்து ஆசியையும் பெற்றுக்கொண்டார். ஒரு சில பக்தர்கள் மாணவிகளின் அசைவுகளுக்கு ஏற்ப பக்தியால் உள்வாங்கப்பட்டு கைகளை அசைத்து தங்களுடைய தெய்வீகம் கலந்த சந்தோஷத்தால் மனம் குளிர்ந்ததை அவதானிக்க முடிந்தது. நாதஸ்வர தவில் வித்துவான்கள் அசத்தலாக இசை வழங்கி பக்தர்களை மகிழ்வித்தனர். எல்லாம்வல்ல விநாயகப்பெருமான் கருட வாகனத்தில் காட்சியளித்தார். கொடிகாமம் மக்களினால் இன்றைய இரவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதியில் அன்னதானம் வழமைபோல வழங்கப்பட்டது.